என் வீட்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்,
கையில் தட்டு நிறைய மனித குலத்தை பாவக் குழியில் தள்ளிய பழத்துண்டுகள் !
காதில் கையடக்க ஒலிப்பெருக்கி (அல்லது ஒலிக்குறுக்கியா?)
எனக்கு பிடித்த பாடல்கள் iPodல்இருந்து !
கண்கள் நீலக்கடலை நோக்கி,
ஏனோ கடல் அமைதியாக இருந்தது,
சலனமின்றி என் மனதைப்போல் !

* மதியம் கேட்ட வானிலை அறிக்கை மனதில் ஒலித்தது,
"வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் -
தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பம்"
என் உதட்டின் ஓரம் ஏளனச் சிரிப்பு,
எனக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகள் எண்ணி,
அதற்கு காற்றழுத்தம்,
எனக்கு மன அழுத்தம் !
*வானம் கருத்தது,
கடிகாரத்தில் மணி நான்கு
ஆனால் ஏழு மணி இருட்டு !
தொலைவில் ஒரு மாடியில் உலர்த்திய துணிகளை அவசரமாக எடுத்துக்கொண்டு இருந்தால் ஒரு பெண்;
எனக்குக் குட அந்த துணிகள் போல் என் மனக்கவலைகளை கழட்டி உலர்த்த ஆசைதான் !
*என் பைக்கில் ஏதோ விழுந்தது போல் இருந்தது,
என்ன என்று பார்பதற்குள் விடை கிடைத்தது,
இந்த வருடத்தின் முதல் மழை, பெருந்துளிகளாய் பூமியை ஈரமாகியது,
என் காய்ந்துப்போகாத நினைவுகளையும்தான் !

* சென்ற வருடத்தின் முதல் மழை,
நானும் என்னவளும் இதே மெரினா கரையோரம்,
நடைபயிலும்போது கையில் குடையின்றி,
அவளது துப்பட்டாவை தலைமறையாக்கி உடல் உரசி நனைந்தோம் !
சில பல நிமிடங்களில் மழை விட்டது,
ஆனால் அவள் உடல் நடுக்கம் விடவில்லை,
மழையில் நனைந்த வெண்புறாவாய் அவள்,
அந்நடுக்கத்தை ரிக்டர் ஸ்கேலில் அதிகமாக்க அவள் இடையில்
செய்தேன் விரல் விளையாடல்,
அன்று அவள் துள்ளி அணைத்தது இன்றளவும் என் தேகம் சொல்லும் !
அன்று வீட்டிற்குச் சென்ற பின்னும் அவள் நினைவுதான்...

*அதே மழைக்காலம்,
இடிபோன்ற ஒருத் தகவல்,
அவள் இடி தாக்கி உயிரிழந்தாள் என்று,
பேரிடி என் வாழ்விலும்.

*ஆயிற்று ஓராண்டு,
இயந்திரமாய் உணர்ச்சியற்ற நான்,
எண்ண அலைகள் இல்லாமல் என் மனக் கடல்,
இன்னும் மழை விடவில்லை,
இந்த முதல் மழைக்கும் எனக்கும் என்னத் தொடர்போ,
போன வருடத்திற்கும் முந்தைய முதல் மழையில்தான்
அடையாரின் ஏதோ ஓர் வீதியில்,
தன் புடவையின் தலைப்பால்
தலை மறைத்து,
என் பைக் மறைத்து,
லிப்ட் கேட்டாள்,
அன்று அவள் வீட்டில் விட்டு,
மொபைல் நம்பர் பரிமாற்றிக் கொண்டு,
பிள்ளையார்சுழி போட்டுக் கொண்டது எம் உறவு...
*என் எண்ணங்களை கலைத்து,
நான் கேட்ட பாடலின் ஒலியையும் மீறி ஒலித்தது
எங்கோ விழுந்த இடியின் ஒலி,
என் மனம் அதன் சயனத்தில் இருந்து விடுபட்டது,
கொந்தளித்தது, கோவப்பட்டது - கடவுளிடம் -
அது இடிக்காக, அவள் மரணத்திற்காக அல்ல,
என்னை அந்த இடி விழுந்த இடத்தில் இடாததற்காக !

*மீண்டும் கடலைப் பார்த்தேன்,
அதன் சயனமும் கலைந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது,
பேரலைகள்,
பாவம் - அது யாரை இழந்ததோ !